திருப்பூர்: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் இன்னும் முழுமையான கூட்டணி உருவாகவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்து இப்போது எந்தவித இறுதி கருத்துகளையும் தெரிவிக்க இயலாது என்றார்.
“தற்போதைய அரசியல் சூழலில் தமிழ்நாட்டில் எந்தக் கூட்டணியும் முழுமையாக உருவாகவில்லை. பாமகவில் சிறிய பிரச்சினை மட்டுமே உள்ளது. அதைச் சமாளித்து ஒன்றுபட்ட, வலுவான பாமக விரைவில் களத்தில் இறங்கும் என்று நம்புகிறோம்,” என்றார் அண்ணாமலை.
எந்த கட்சியையும் உடைக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என்று குறிப்பிட்ட அவர், பாமகவின் உள்கட்சிப் பிரச்சினைகளுக்கு பாஜக பொறுப்பு என்பது தவறான தகவல் என்றார்.
“கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலைகள் வழியாக திட்டத்தை மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
விவசாயிகளின் நலனுக்காக இதைச் செய்ய மாநில அரசு முன்வர வேண்டும்.
“மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 11 ஆண்டுகளில் என்ன செய்தது என்பதை மக்களிடம் தெரிவிக்கிறோம். ஆனால் திமுக அளித்த 511 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றியுள்ளது என்பதை நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகும் சொல்லவில்லை,” என்று அண்ணாமலை மேலும் கூறினார்.