சென்னை: தமிழக காவல்துறை மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நம்பிக்கையை இழந்துவிட்டதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சிபிசிஐடியின் விசாரணை ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், வேங்கை வயல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் திருமாவளவன் மீண்டும் வலியுறுத்தினார்.
“வேங்கைவயல் பகுதியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதனை வாக்கு அரசியல் அடிப்படையில் அவர்கள் கையாள்வதாகத் தெரியவில்லை.
“அதிகாரிகள் மத்தியில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான மனநிலை இருக்கிறது. சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கிறோம்,” என்றார் திருமாவளவன்.
தவெக தலைவர் விஜய் வேங்கைவயல் செல்வதாக சொன்னதை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய நிலை குறித்து விஜய் கருத்து ஏதும் சொன்னதாகத் தெரியவில்லை என்றார்.
“நடந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்பட்டிருப்போரை கைது செய்தால் மிகப்பெரிய எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும். சமூகநீதி பக்கம் திமுக அரசு நிற்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்றார் திருமாவளவன்.
வேங்கைவயல் பகுதியில் உள்ள நீர்த்தொட்டியில் அடையாளம் தெரியாத சிலர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனித மலத்தைக் கலந்துவிட்டனர். இந்த வழக்கில் காவல்துறையின் விசாரணை குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

