ராமநாதபுரம்: புதிய பாம்பன் ரயில்வே பாலக் கட்டுமானப் பணியில் எந்தவொரு குறைபாடும், குழப்பமும் இல்லை என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
பாம்பன் பாலக் கட்டுமானப் பணிகளில் குறைபாடுகள் இருப்பதாக தெற்கு ரயில்வே முதன்மைப் பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சௌத்ரி அண்மையில் சுட்டிக்காட்டி இருந்த நிலையில், இது ரயில்வே துறையினர் எச்சரிக்கையுடன் செயல்படுவதற்காகக் கூறப்படும் வழக்கமான அறிவுறுத்தல்தான் என்று ஆர்.என் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளரான சிங் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை (நவம்பர் 30) பேசியபோது, “பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணியில் எந்தவொரு குழப்பமும் இல்லை. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சௌத்ரி ஒரு சில விஷயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அது வழக்கமான அறிவுறுத்தல்தான். அவற்றை இன்னும் ஒரு வாரத்துக்குள் சரிசெய்து விரைவில் பாலம் திறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்,” என்று தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் பாம்பன் கடலின் நடுவே உள்ள 105 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில் பாலத்தின் அருகிலேயே ரூ.550 கோடியில் புதிதாக ரயில் பாலம் கட்டும் பணி கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
ரயில் பாலக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் பெரும்பாலான அளவில் முடிவு பெற்றுள்ள நிலையில், பாலத்தின் மீது ரயிலை ஓடவிட்டு சோதனை ஓட்டமும் நடைபெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து, விரைவில் இப்பாலம் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.