உதகை: எத்தகைய அரசியல் சூழ்ச்சிகளாலும், தமிழகத்தை வீழ்த்த முடியாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
உதகையில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி அவர் பேசினார்.
நீலகிரி நிகழ்ச்சியால் பாம்பனில் நடக்கும் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என தமிழக மண்ணில் இருந்து பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும். எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறைந்தால், தமிழகத்தை நசுக்கிவிடுவார்கள். தமிழகத்தின் வலிமையை குறைக்க பாஜக துடிக்கிறது.
சங்ககாலம் தொட்டு, குடியாட்சி காலத்திலும் கோலோச்சும் தமிழகத்தை எத்தகைய அரசியல் சூழ்ச்சியாலும் வீழ்த்த முடியாது. அதனைவிட மாட்டேன் என்று ஸ்டாலின் கூறினார்.
காட்டேரியிலிருந்து மஞ்சூர் வழியாக உதகைக்குச் செல்லும் உதகைக்கான மூன்றாவது பாதையை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) அவர் திறந்து வைத்தார். குன்னூர் செல்லாமல் நேரடியாக உதகைக்குச் செல்லும் வகையில் இந்தப் புதிய பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை திறந்து வைத்த ஸ்டாலின், பிறகு முடிவடைந்த பணிகளை துவக்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
ஏழைகளுக்காக கூடலூரில் ரூ. 26.6 கோடியில் 300 வீடுகள் கொண்ட கலைஞர் நகர்; ரூ.10 கோடி செலவில் பழங்குடியினர் அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையம்; ரூ.5 கோடி செலவில் 10 புதிய சுற்றுலாப் பேருந்துகள்; ரூ.20 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்; சூழலியல் இயற்கை மையம்; பழங்குடியின மக்கள் பகுதியில் 23 சமுதாயக் கூடங்கள், நகர்ப்புறங்களில் பழங்குடியினருக்கு புதிய வீடுகள் முதலிய ஆறு அறிவிப்புகளையும் நீலகிரி மாவட்டத்திற்கு அவர் வெளியிட்டார்.