தோ்தல் வழக்குகள் முடியும்வரை இடைத்தோ்தல் இல்லை: ஆணையம்

தோ்தல் வழக்குகள் முடியும்வரை இடைத்தோ்தல் இல்லை: ஆணையம்

2 mins read
148baf4e-ecf1-4fe0-bfe0-84158cdd03b7
இடைத்தேர்தல் அறிவிப்பது சட்டச் சிக்கல்களை உருவாக்கும் என்று வழக்கறிஞர் வெங்கடாசலபதி தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார். - கோப்புப் படம்: ஈடிவி பாரத்
Google News Preferred Icon

சென்னை: தேர்தல் தொடர்பான வழக்குகள் முடியும்வரை தமிழ்நாட்டில் இடைத்தோ்தல் நடத்தும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.வெங்கடாசலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் தேர்வை எதிர்த்துத் தோல்வியடைந்த வேட்பாளர்கள் தனித்தனியாகத் தேர்தல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர் என்றும் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் சூழலில் இடைத்தேர்தல் அறிவிப்பது சட்டச் சிக்கல்களை உருவாக்கும் என்றும் திரு வெங்கடாசலபதி தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது.

இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், உச்ச நீதிமன்றத்தின் முன்னைய தீர்ப்புகளின்படி, ஒரு தொகுதியின் வெற்றிச் செல்லுபடித் தன்மை குறித்த தேர்தல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அங்கு இடைத்தேர்தல் நடத்தும் திட்டம் எதுவும் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில் ஐந்து தொகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இடைத்தேர்தலுக்கான தடையை செப்டம்பர் 8ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்