வீடுகளுக்கான மின்கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் சிவசங்கர்

1 mins read
7d06c698-ce86-4c08-ae3b-881baee78d2d
தமிழகப் போக்குவரத்து, மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: இவ்வாண்டு ஜூலை மாதத்திலிருந்து மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று மாநிலப் போக்குவரத்து, மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாள்களாகச் செய்தி ஊடகங்களில் மின்கட்டண உயர்வு குறித்த அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

“தற்சமயம் மின்கட்டண உயர்வு குறித்து எந்த ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

“எனினும், ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும் தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்,” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் வரும் ஜூலை மாதத்திலிருந்து வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின்கட்டணம் 3.16% உயர்த்தப்படவிருப்பதாக செய்திகள் வெளியாயின. அதற்குப் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வீடுகளுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளபோதும், வணிகப் பயன்பாட்டிற்கான மின்கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடைசியாக, தமிழ்நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்