தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தித் திணிப்பு வேண்டாம்; தொழில்நுட்ப வளர்ச்சிதான் தேவை: ஸ்டாலின்

2 mins read
e9290842-cb7e-42f5-a370-d51d4c5bf5c4
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். - கோப்புப்படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னை: மாணவர்களுக்குத் தேவை இந்தித் திணிப்பு அல்ல, அவர்களுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சிதான் தேவை. அவர்களுடைய எதிர்காலத்திற்குப் பயன் அளிக்கக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சிதான் அவர்களுக்குத் தேவை. எனவே, தொழில்நுட்பத்தில் அவர்கள் சிறந்து விளங்குவதற்கான நடவடிக்கைகள்தான் இப்போதையத் தேவை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடம் இந்தி மொழியைத் திணிக்க முயற்சி செய்வது அவர்களுக்குச் சுமையாகவே அமையும். அதைவிடுத்து, அவர்களின் எதிர்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கக் கூடிய தொழில்நுட்பத்தைக் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதைத் தடுத்திடவும், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைத்திடவும் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு முயன்று வருகிறது.

இவற்றை எதிர்கொள்ளும் வலிமை கொண்ட திமுக மீது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தித் திணிப்பை எதிர்க்கும் இலக்கை நோக்கித் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.

பாஜக நிர்வாகியான தமிழிசை செளந்திரராஜன் எனக்கு ‘மும்மொழி’யில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார்.

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘இந்தி’ இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு. தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் அமைந்த வாழ்த்துக்குப் பிறகு, தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார்.

மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும், தேவைப்படுகிறவர்கள் அதனைப் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்கிற திராவிட இயக்கத்தின் கொள்கை வழியிலான தமிழ்நாட்டின் உணர்வையும் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள சகோதரி தமிழிசைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்