சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் நாய்க்கடி, பாம்புக்கடிக்கு மருந்தில்லை என ஒருதரப்பினர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்புவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் ஒரு கிராமத்தில் மருந்தில்லை என்றாலும், அதை ஆதாரத்துடன் நிரூபிப்பவர்களுக்கு தனது சொந்தச் செலவில் பேருந்து, விமானப் பயணச்சீட்டு வாங்கித் தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாய்க்கடிக்கு மருந்து இல்லை எனப் பொதுவாக கூறுகின்றனர் என்றும் எந்த மருத்துவமனையில் மருந்து இல்லை என்று குறிப்பிடுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
“திமுக அரசு பொறுப்பேற்ற பின், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களிலும் நாய், பாம்புக்கடிக்கான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என உறுதியாகச் சொல்ல முடியும்.
“எனவேதான் புகாரை ஆதாரபூர்வமாக நிரூபித்தால் எனது சொந்தச் செலவில் பேருந்து, விமானப் பயணச்சீட்டை வாங்கித்தருவதாகக் கூறுகிறேன். அவர்கள் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் என் செலவில் செல்லட்டும்,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.