சென்னை: விதிமுறைகளை மீறி தமிழகச் சட்டமன்றத்துக்குள் மாநிலச் சிறுபான்மைத் துறையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கைப்பேசி கொண்டு வந்தது விவாதப்பொருளாகி உள்ளது.
அவர் தன் கைப்பேசியில் உள்ள குறிப்புகளை அவையில் பார்த்துப் படித்தது மற்ற உறுப்பினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகச் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நான்காம் நாளான திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) நடைபெற்றது. அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் காலஞ்சென்ற முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பட்ஜெட் அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் விளக்கம் அளிக்க அமைச்சர் ஷாஜகானை அழைத்தார் பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகரன். அமைச்சர் பேசத் தொடங்கியபோது அவரது கையில் கைப்பேசி இருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
சட்டமன்றத்துக்குள் கைப்பேசி கொண்டு வரக்கூடாது என்பது விதிமுறை. மேலும் அதில் உள்ள குறிப்புகளைப் பார்த்துப் படிப்பது மற்றொரு தவறு.
அமைச்சரின் செயல்பாட்டைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், இனி இது போன்று செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி அடுத்த எம்எல்ஏவைப் பேச அழைத்தார்.
தற்போது சமூக சட்டமன்றக் கூட்டத்தொடரின் அவை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பாகிறது. அமைச்சரின் இந்தச் செயல்பாட்டைக் கண்ட ஏராளமானோர் சமூக ஊடகங்களில் விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர்.


