தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விவசாயம் வேண்டாம்: வேறு துறைகளுக்கு மாறும் இளையர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிப்பு

2 mins read
33c37295-c904-4eab-9f7f-3f06d9ed44a6
கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறை போன்ற, வேளாண் சாராத துறைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. - படம்: இணையம்

சென்னை: தமிழகக் கிராமங்களில் விவசாயத்திலிருந்து வேறு துறைகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனத் திட்டக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேளாண் உற்பத்திகளுக்கான விலை குறைந்து வரும் நிலையில், அதிக ஊதியமும் நிலையான வேலையும் இன்றைய இளையர்களை வேளாண் சாராத வேலைவாய்ப்புகளை நாடத் தூண்டுவதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில், ‘வேளாண் சாராத வேலைவாய்ப்பு’, ‘நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030’, ‘தமிழகம் தொலைநோக்கு ஆவணம்’ ‘தமிழக வாகனத் தொழில் துறை எதிர்காலம்’, தமிழகத்தை அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி வடிவமைத்தல்’ ஆகிய பிரிவுகளின்கீழ் நான்கு ஆய்வு அறிக்கைகளை உருவாக்கியுள்ளது தமிழகத் திட்டக்குழு.

அந்த அறிக்கைகளை முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த மாநிலத் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், ஊரகப் பகுதிகளில் வேளாண் சாராத வேலைவாய்ப்பு குறித்த ஆய்வு, மாநில ஊரக வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தி உள்ளது என்றார்.

“அதிக அளவிலானோர், விவசாயத்தில் இருந்து வேறு துறைகளுக்கு மாறும் நிலை காணப்படுகிறது. கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறை போன்ற, வேளாண் சாராத துறைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

“தற்போது 75%கும் அதிகமான ஆண் தொழிலாளர்கள், 50%க்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள், வேளாண் அல்லாத துறைகளில் வேலை செய்யும் நிலை உள்ளது,” என்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது ஜெயரஞ்சன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை, தஞ்சை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 12 கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இந்த கிராமங்களில், 10 ஆண்டுகளுக்கு முன் தாம் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ததாகக் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த வளர்ச்சி இலக்குகளைச் செயல்படுத்த, தமிழக அரசு நிறுவன கட்டமைப்பை உருவாக்கி உள்ளது என்றும் இதற்காக உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்தியாவின் முக்கிய வாகன உற்பத்தி மையமாக தமிழகம் உள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் ஒவ்வொரு ஐந்து கார்களில், ஒன்றை உற்பத்தி செய்வதுடன் 45% ஏற்றுமதிக்குப் பங்களிக்கிறது.

“வாகன உற்பத்தியில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்ற ஏதுவாக, அரசின் கொள்கை வகுத்தல், பசுமை எரிபொருள் பயன்பாடு, அதிகளவில் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தல் உள்ளிட்ட பரிந்துரைகளை இந்த அறிக்கை வழங்குகிறது.

“தமிழகத்தை அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி வடிவமைத்தல் அறிக்கை, உலகளாவிய திறன் மையங்கள், உற்பத்தித் துறையின் எதிர்கால வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது,” என்றார் ஜெயரஞ்சன்.

இந்த அறிக்கையில், தொழில் துறை வளர்ச்சியை மேலும் வேகப்படுத்த, புதுமை, தொழில்நுட்பம், நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு, உற்பத்தியை மறுசீரமைக்கும் வழிமுறைகள் விரிவாக விவரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்