தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் புதிய முதலீடுகள் செய்யவில்லை: ‘ஃபாக்ஸ்கான்’

1 mins read
e9f1eafa-1826-4535-b643-16b1a5329b7d
‘ஃபாக்ஸ்கான்’ நிறுவனத் தலைவர் ராபர்ட் வூ, அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் 15,000 கோடி ரூபாயை பிரபல ‘ஃபாக்ஸ்கான்’ நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக வெளியான தகவலை அந்நிறுவனம் மறுத்துள்ளது.

‘ஃபாக்ஸ்கான்’ நிறுவனத் தலைவர் ராபர்ட் வூ, அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து, அந்நிறுவனம் தமிழகத்தில் ரூ.15,000 கோடியை முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளது என்றும் இதன்மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழகத் தொழில்துறை அமைச்சர் ராஜா கூறியிருந்தார். ஆனால், இத்தகவலை அந்நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தமிழக முதல்வருடனான சந்திப்பின்போது புதிய முதலீடுகள் குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை என அந்நிறுவனம் கூறியுள்ளது. இதனால் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், தமிழக அரசை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

எதற்காக இப்படிப்பட்ட தவறான தகவலைத் தமிழக முதல்வரும் தொழில்துறை அமைச்சரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர் என்று தமிழக பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“மக்களைத் திசைதிருப்பும் செயல். இல்லாத ஒன்றை இருப்பதாகவும் நடக்காத ஒன்றை நடந்ததாகவும் அமைச்சர் அதிகாரபூர்வமாகப் பதிவிட்டுள்ளது கண்டனத்திற்குரியது. இதே போன்றுதான் மற்ற முதலீடுகள் குறித்தும் அரசு கூறி வருகிறதா எனும் சந்தேகம் எழுகிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்