திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவில் நிர்வாக்தை யாரும் கட்டாயப்படுத்த முடியாது எனத் தமிழக அரசு தரப்பு மதுரை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மேலும், மலை மீது இருப்பது தீபமேற்றும் கல்தூண் அல்ல என்றும் அது நில அளவைக்கல் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இது குறித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் கோவில் நிர்வாகம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், பல ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகில்தான் இந்த தீபம் ஏற்றப்பட்டது என்றும் கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனி நபருக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டார்.
“மலை மீது தீபம் ஏற்றுவது வேறு, வீட்டில் தீபம் ஏற்றுவது வேறு. தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோவில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த இயலாது. கோவிலின் பராமரிப்பு, அடிப்படை திட்டங்களை நிறைவேற்றும் கடமை, அரசுக்கும் அறநிலையதுறைக்கும்தான் உள்ளது,” என்றார் கோவில் நிர்வாகத்தரப்பு வழக்கறிஞர்.
மேலும் கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை ஆகம விதிப்படிதான் நடைபெற்று வருகிறது என்றார் அவர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் கோவிலின் அறங்காவலர் குழு செயல்பாட்டில் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
1989ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில் நாகஸ்வாமி எழுதிய புத்தகத்தை நீதிபதியிடம் அளித்தபோது அறநிலையத்துறை வழக்கறிஞர்கள் அதில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது உச்சி பிள்ளையார் அருகே உள்ள தூண்தான் என்றும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

