சென்னை: போதிய பயணிகள் இல்லாததாலும் செயல்பாட்டுக் காரணங்களாலும் சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) ஆறு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
ரத்து செய்யப்பட்ட விமானச் சேவைகளில் சென்னை-கோழிக்கோடு ஸ்பைஸ்ஜெட் விமானம், சென்னை-கொச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், சென்னை-சி மோகா ஸ்பைஸ்ஜெட் விமானச் சேவைகளும் அடங்கும்.
அதேபோல சென்னைக்கு வரும் மூன்று விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. கோழிக்கோடு-சென்னை ஸ்பைஸ்ஜெட், அந்தமான்-சென்னை ஆகாசா ஏர், சிமோகா-சென்னை ஸ்பைஸ்ஜெட் விமானச் சேவைகள் அவை.
விமானப் பயணச்சீட்டுகளை வாங்கியிருந்த பயணிகளுக்கு விமானச் சேவை ரத்து குறித்து முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டதாகவும் அவர்களுக்கு மாற்றுப் பயண ஏற்பாடுகள் செய்து தரப்பட்டதாகவும் விமான நிறுவனத் தரப்புகள் தெரிவித்தன.