சென்னை: ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையைத் தமிழக அரசிடம் விமானப் போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்துள்ளது.
தற்போது, தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூா், திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் உள்ளன.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் எனத் தொழில் நிறுவனங்களும் மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் அனைத்துலக விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படும்,” எனத் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஓசூர் கிழக்கிலும் தெற்கிலும் தலா ஒரு இடத்தைத் தேர்வு செய்து அவற்றில் ஏதேனும் ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்க விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சிடம் தமிழக அரசு அனுமதி கேட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இவ்வாண்டு மார்ச்சில் விமானப் போக்குவரத்து ஆணையம் வரைவு சாத்தியக்கூறு ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தது.
அதில், “தமிழக அரசு விமான நிலையம் அமைக்கத் தேர்வு செய்துள்ள இரு இடங்களில் எவ்வித சிக்கலும் இல்லை,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலையம் அமைக்க ஒப்புதல் கோரி பாதுகாப்பு அமைச்சிற்குத் தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.