கொல்ல சதி எனப் பெண் ஏடிஜிபி அளித்த புகாரில் உண்மை இல்லை: டிஜிபி

கொல்ல சதி எனப் பெண் ஏடிஜிபி அளித்த புகாரில் உண்மை இல்லை: டிஜிபி

1 mins read
c9bf9cde-537a-48a2-96e5-209b1a7dc5ee
காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) கல்பனா நாயக். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தம்மை கொல்ல சதி நடந்ததாக காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) கல்பனா நாயக் கூறிய குற்றச்சாட்டுக்கு காவல்துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் 2024 ஜூலையில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தைச் சுட்டிக்காட்டிய ஏடிஜிபி கல்பனா நாயக், துணைக் கண்காணிப்பாளர் தேர்வில் இடஒதுக்கீடு வழங்கியதில் முரண்பாடு இருப்பதாக தாம் புகார் தெரிவித்ததால் தம்மை கொல்ல சதி நடந்ததாக குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், அவரது குற்றச்சாட்டுக்கு டிஜிபி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

“சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் தலைமையில் நடந்த விசாரணையில் 31 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.

“கல்பனா நாயக் அறையில் வேண்டுமென்றே திட்டமிட்டு தீ வைத்ததற்கான ஆதாரங்கள் இல்லை. அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தீ வைக்கவில்லை. தீ விபத்து நடந்த அன்றே விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு நாசவேலை காரணமல்ல.

“அறையில் மின்கசிவு ஏற்பட்டதற்கான தடயங்கள் இருந்ததாக தடயவியல் துறை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது,” என டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்