சென்னை: முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான நோக்கியா சென்னையில் ரூ.270 கோடி முதலீடு செய்யவிருப்பதாகத் தமிழகத் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
நிலைத்தன்மை மிகுந்த ஆராய்ச்சி, உருவாக்க வசதிக்காக நோக்கியா நிறுவனம் தமிழ்நாட்டை அணுகியிருக்கிறது என்று ஓர் அறிக்கை வாயிலாக அமைச்சர் கூறியுள்ளார்.
இத்தகைய நடவடிக்கையின்மூலம் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் தமிழகத்தின் தலைமை வலுப்படுகிறது என்றும் நோக்கியா சென்னை சிப்காட் சிறுசேரியில் தனது புதிய ஆராய்ச்சி, உருவாக்க மையத்தை திறக்கிறது என்றும் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆராய்ச்சி, உருவாக்கப் பணிகள் சார்ந்த முதலீட்டாளர்களில் நோக்கியா நிறுவனமும் முக்கியமான நிறுவனம் என்று திரு ராஜா குறிப்பிட்டார்.
ஏற்கெனவே கடந்த 1997ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 1,000க்கும் மேற்பட்ட பொறியாளர்களை நோக்கியா நிறுவனம் பணி அமர்த்தி இருப்பதை அமைச்சர் டிஆர்பி ராஜா சுட்டிக்காட்டினார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின்போது கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் புதிய விரிவாக்கம் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தப் புதிய திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக ரூ.220 கோடி முதலீடு செய்யப்படும் என்று உறுதியளித்திருந்த நோக்கியா நிறுவனம், தற்போது அதனை ரூ.270 கோடியாக உயர்த்தியுள்ளது.
இரண்டாம் கட்டமாக, நோக்கியா ஏறக்குறைய ரூ.300 கோடி முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் ராஜா மேலும் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
நோக்கியா நிறுவனத்தின் முதலீடு மூலம் புதிதாக நூற்றுக்கணக்கில் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனக் கூறப்படுகிறது.
தமிழகம் தொழில்துறையில் கண்டுவரும் முன்னேற்றத்துக்கு இந்த முதலீடு நல்ல சான்றாக அமைந்துள்ளது என்று அமைச்சர் ராஜா குறிப்பிட்டார்.

