கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. அதனால், அங்குள்ள ஆறு, கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரில் கோக்கூர், கதிர்வேல்நகர், நேதாஜி நகர், ராஜீவ்நகர், சிவஜோதி நகர், ஆதிபராசக்தி நகர், மச்சாது நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மாநகராட்சி சார்பில் மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம், நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு, மாவட்ட விளையாட்டு மைதானம், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போலத் தேங்கி நிற்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பணியாளர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகரில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் பி.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சி.பிரியங்கா ஆகியோர் ஆய்வு செய்து, அப்பணியைத் துரிதப்படுத்தினர்.
இந்தக் கனமழை சூழலைக் கருத்தில் கொண்டு பேரிடர் குழுக்கள் தயார்நிலையில் உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாகத் தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது, இதன் ஒரு பகுதியாக முத்தையாபுரம், ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த உப்பளங்களை மழை நீர் சூழ்ந்தது.
இதில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்கள் சேதடைந்துள்ளன. இந்த நிலையில், ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
உப்பளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்திப் பணி முடங்கியுள்ளது. அதனால் வேதனையடைந்த உப்பு உற்பத்தியாளர்கள், ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

