வடசென்னை எரிஉலை திட்டம் ஆபத்தானது: ஆய்வுக்குழு எச்சரிக்கை

2 mins read
a4e846be-e279-4036-8e00-33fb360354b7
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலைத் திட்டம் வடசென்னையின் கொடுங்கையூரில் செயல்படுத்தப்படவுள்ளது. அங்கு எரிஉலை ஏற்படுத்தப்பட்டால் அப்பகுதி மக்கள் சுகாதாரக் கேட்டால் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று ஆய்வுக் குழு வலியுறுத்தியுள்ளது. - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை: வடசென்னையில் எரி உலை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும் என்று அப்பகுதி மக்களிடம் இருந்து கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத் நகரில் இயங்கும் எரிஉலையை நேரில் ஆய்வுசெய்த குழுவினரும் இந்தத் திட்டம் மக்களின் சுகாதாரத்துக்குக் கேடுவிளைவிக்கக் கூடியது, எனவே, உடனடியாக இந்தத் திட்டத்தை அரசு மீட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சண்முகம், மாநகராட்சி கவுன்சிலர் ஜெயராமன், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து, ஹைதராபாத்தில் ஜவகர் நகர்ப் பகுதியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலைத் திட்டப் பகுதிகளைச் சுற்றி கடந்த மே 7 ஆம் தேதி ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வுக்குப் பின், ஆய்வு முடிவு குறித்து அந்தக் குழுவினர் ஓர் அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், “ஹைதராபாத்தில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை இயங்கும் ஜவகர் நகரைச் சுற்றி கார்மிகா நகர், ஒய்எஸ்ஆர் நகர், காபிலா பேட்டை, சாந்தி நகர் உள்ளிட்ட குறைந்த வருவாய் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன.

இங்கு வசிக்கும் மக்களுக்கு மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை ஏற்படுத்தும் மாசு காரணமாகச் சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சிகிச்சைக்காக மாதம் ரூ.5,000 வரை செலவிட வேண்டி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எரிஉலையில் இருந்து, நச்சுத்தன்மை வெளியேற்றங்களின் தாக்கம் மிக அதிகம். அந்த ஆலையால் 18 நீர்நிலைகள் மாசுபட்டுள்ளன.

ஹைதராபாத் எரிஉலையை இயக்கும் எம்எஸ்டபிள்யூ எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறியுள்ளதாகத் தெலுங்கானா மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகள் தெரிவிப்பதை ஆய்வுக் குழுவினர் அறிக்கையில் சுட்டிக்காட்டினர்.

சென்னையில் இதுபோன்று குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை, இப்பகுதி மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும். ஹைதராபாத் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் புறநகர்ப் பகுதியில் உள்ளது. ஆனால், சென்னை கொடுங்கையூர், நகரத்தின் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதி. எரிஉலையால் மக்களுக்குத் தீங்கு அதிகமாக இருக்கும். எனவே வடசென்னையில் எரிஉலை அமைக்கும் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்