போலி கைப்பேசிகளைக் காட்டி மோசடி செய்த வடமாநிலக் குடும்பம் சிக்கியது

போலி கைப்பேசிகளைக் காட்டி மோசடி செய்த வடமாநிலக் குடும்பம் சிக்கியது

2 mins read
eba6703e-b84b-4cdd-a4dc-828f1cb202eb
கைதான நால்வரிடம் இருந்தும் 26 போலி கைப்பேசிகளைக் காவல்துறை பறிமுதல் செய்தது. - படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

சென்னை: விலை உயர்ந்த கைப்பேசிகளைக் குறைந்த விலை​யில் தரு​வ​தாகக் கூறி திருவண்ணாமலையில் மோசடி செய்த மகாராஷ்டிரக் கும்பலைக் காவல்துறை கைது செய்துள்ளது.

சென்னை பூந்தமல்லிப் பகுதியில் கார் ஓட்டுநராக வேலை செய்து வருபவர் சத்தியராஜ், 31. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அவர் கடந்த திங்கட்கிழமை (மே 4) அண்ணாநகர் வள்ளியம்மாள் கல்லூரித் தெருவில் தமது காரை நிறுத்திவிட்டு அதனுள் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்​போது, அங்கு குடும்​பத்​துடன் வந்த வடமாநிலத்​தைச் சேர்ந்த நால்வர், தங்களது குழந்​தைக்கு உடல்​நிலை சரி​யில்​லாததால் மருத்​துவ​மனைக்கு அழைத்​துச் செல்ல அவசர​மாகப் பணம் தேவைப்​படு​கிறது என்றும் மருத்துவச் செலவுக்குப் போதுமான பணம் இல்​லாததால் தங்களிடம் உள்ள விலை உயர்ந்த கைப்பேசியை வைத்​துக் கொண்டு பணம் கொடுத்​தால் உதவி​யாக இருக்​கும் என்றும் சத்தியராஜிடம் கேட்டுள்ளனர்.

விலை அதிகமுள்ள கைப்பேசி குறைந்த விலை​க்குக் கிடைக்​கிறதே என ஆசைப்​பட்ட சத்​தி​ய​ராஜ் ரூ.12 ஆயிரம் கொடுத்து, அதனை வாங்கிக்கொண்டார். ​பின்​னர் மாலை​யில் வீடு சென்று கைப்பேசியை இயக்​கியபோது அது செயல்படவில்லை.

கைப்பேசி பழுதுபார்க்கும் கடைக்கு சென்று சோதித்​த​போது அது போலி​யான கைப்பேசி எனத் தெரிய​வந்​தது. அதிர்ச்​சி​யடைந்த அவர், இது தொடர்​பாக அண்ணா நகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதனைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் பெண் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கைப்பேசியைக் காட்டி மோசடி செய்பவர்கள் என்றும் தெரிய வந்தது.

அவர்கள் வைத்திருந்த 26 போலி கைப்பேசிகளையும் 27 மின்னேற்றிகளையும் 9 ரூபாய் ரொக்கப் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்