சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட நீண்ட கால வானிலை கணிப்பின் அடிப்படையில் வருகின்ற வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் (அக்டோபர் - டிசம்பர் 2025) தமிழகத்தின் தென்கோடிப் பகுதிகளைத் தவிர்த்து எல்லா இடங்களிலும் பொதுவாக இயல்புநிலையில் (440 மி.மீ.) இயல்பிலிருந்து சற்று அதிகமான (சுமார் 500 மி.மீ.) மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் இந்த முன்னுரைப்பு பொருந்தும்.
தமிழகத்தின் தென்கோடிப் பகுதிகளில் பொதுவாக வடகிழக்குப் பருவமழை இயல்புக்குக் குறைவாக இருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் வழக்கத்தைவிட 15 விழுக்காடு அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, மத்திய மற்றும் தீபகற்ப பகுதிகளில் சராசரிக்கும் குறைவான வெப்பநிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மாறாக ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், கிழக்கு உத்தரப் பிரதேசம், குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் மிருத்யுஞ்சய மொகபத்ரா குறிப்பிட்டுள்ளார்.