சென்னை: ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளில், 10 விழுக்காடு குற்றவாளிகள்கூட தண்டிக்கப்படவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில், 2015 முதல் 2022 வரை போக்சோ சட்டத்தின்படி, 21,672 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றுள், இதுவரை 2023 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
30% வழக்குகளில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, 12,170 வழக்குகள், அதாவது 60% வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படாமல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன என தமது அறிக்கையில் புள்ளி விவரங்களையும் திரு ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
“போக்சோ வழக்குகளில் ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, போக்சோ வழக்குகள் தேங்கியுள்ளன.
“போதிய எண்ணிக்கையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாததும் புலன் விசாரணைகள் சரியாக மேற்கொள்ளப்படாததும்தான் இதற்குக் காரணம்,” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகள் தப்பிவிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாக, அச்சம் குறைந்து, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றால், அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் நிலவ வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில், தேவையான போக்சோ நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்,” என ராமதாஸ் மேலும் வலியுறுத்தி உள்ளார்.


