‘விசில்’ சின்னத்துக்குப் பதில் ‘நோட்டா’: குழப்பத்துக்கு விடை

‘விசில்’ சின்னத்துக்குப் பதில் ‘நோட்டா’: குழப்பத்துக்கு விடை

2 mins read
9346969b-68dc-4ffa-a477-ded5c8caf724
வாக்குப்பதிவு இயந்திரத்தின் 16வது இடம் எப்போதும் நோட்டாவுக்கு ஒதுக்கப்படும். - படம்: தி இந்து

சென்னை: பெரம்பூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் விஜய்யின் பெயருக்கு எதிரில் நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) சின்னம் இடம்பெற்றிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.

தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவுக்கான வேட்பாளர்கள் பட்டியலில், அவர் பெயர் 16வது இடத்தில் வருகிறது.

வாக்குப் பதிவு இயந்திரத்தின் 16வது பொத்தான் எப்போதும் நோட்டாவுக்கு ஒதுக்கப்படும்.

அதன் அடிப்படையில் ‘நோட்டா’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் தயாரித்துள்ள துண்டுப் பிரசுரத்தில் ‘நோட்டா’ என்பது 16வது இடத்தில் இருந்துள்ளது. இது பெரம்பூர் தொகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

“சில ஆண்டுகளுக்கு முன்பு ‘நோட்டா’ வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அந்தக் காலத்தில், வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசிப் (16வது) பொத்தான் ‘நோட்டா’ என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டுப் பிரசுரங்களைத் தேர்தல் ஆணையம் அச்சிட்டது. அதை இப்போது யாரோ தவறுதலாக எடுத்து விநியோகம் செய்துள்ளனர்.

“வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறும். அதற்கு மேல் வேட்பாளர் இருந்தால், 2வது வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்கப்படும்.

“அந்த வகையில், பெரம்பூரில் 47 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், மொத்தம் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

“பதிவு செய்யப்பட்ட கட்சியின் வேட்பாளரான தவெக தலைவர் ஜோசப் விஜய் பெயரின் முதல் எழுத்தான ‘ஜோ’, தமிழ் அகர வரிசையின் இறுதியில் வருவதால் பட்டியலில் அவரது பெயர் 16வதாக உள்ளது.

“பெரம்பூரைப் பொறுத்தவரை, மூன்றாவது இயந்திரத்தின் கடைசிப் பொத்தான் ‘நோட்டா’வாக இருக்கும்.

“15க்கும் குறைவாக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும்தான் 16வது இடத்தில் ‘நோட்டா’ இடம்பெறும்,” என்று தேர்தல் ஆணையம் விளக்கம் தந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்