ரூ.10 லட்சத்தைப் பறிகொடுத்த வெளிநாடுவாழ் இந்தியர்

ரூ.10 லட்சத்தைப் பறிகொடுத்த வெளிநாடுவாழ் இந்தியர்

2 mins read
4d5a1c06-1710-4947-8696-a250f718b26d
மோசடிப் பேர்வழி அனுப்பிய இணைப்பைச் சொடுக்கியதும், ரூ.10 லட்சம் பணம் எடுக்கப்பட்டுவிட்டது. படம்: ஊடகம் -

சென்னை: வெளிநாட்டில் மென்பொருள் பொறியாளராகப் பனியாற்றும் ஒருவரிடம் வங்கி அதிகாரிகள்போல் நடித்து, ரூ.10 லட்சம் பறித்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

பத்ரி நாராயணன், 45, என்ற அந்த ஆடவர் அண்மையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தம் தாயைக் காணச் சென்றார். கடந்த புதன்கிழமை அருகிலுள்ள ஏடிஎம் மையத்திற்குப் பணம் எடுக்கச் சென்றார் திரு பத்ரி. ஆனால், மறையெண்ணை (PIN) அவர் இருமுறை தவறாக அழுத்தியதை அடுத்து, ஏடிஎம் அட்டை இயந்திரத்தினுள்ளேயே சிக்கிக்கொண்டது.

திரு பத்ரி வீடு திரும்பியதும் அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

எதிர்முனையில் இருந்த மோசடிப் பேர்வழி சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாகக் கூறியுள்ளான். வருமான வரி விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் எனக் கூறி, திரு பத்ரியிடம் அவரது வங்கிக் கணக்கு மற்றும் ஏடிஎம் அட்டை விவரங்களை அவன் கேட்டுள்ளான்.

ஏடிஎம் அட்டை மாட்டிக்கொண்டதால் கவலையில் இருந்த திரு பத்ரி, அவர் கேட்ட விவரங்களை உடனே பகிர்ந்துகொண்டார். பின்னர் அந்த ஆள், திரு பத்ரியின் கைப்பேசிக்கு ஓர் இணைப்பை அனுப்பியுள்ளான். திரு பத்ரி அந்த இணைப்பைச் சொடுக்கியபின், அவரது கணக்கில் இருந்து மூன்றுமுறை மொத்தம் ரூ.10 லட்சம் எடுக்கப்பட்டுவிட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த திரு பத்ரி, வங்கிக்கு நேரில் சென்று விசாரித்த பிறகுதான் தாம் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். பின்னர் அதுபற்றிக் காவல்துறையிடம் அவர் புகார் அளிக்கவே, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.