234 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்கள் அறிமுகம்: காரைக்குடியில் சீமான் போட்டி

234 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்கள் அறிமுகம்: காரைக்குடியில் சீமான் போட்டி

2 mins read
e5d190ea-c5dd-4283-866d-e1666e343833
திருச்சி மாவட்டத்தின் ஆலம்பட்டி புதூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். - படம்: இந்து தமிழ்

திருச்சி: திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாட்டில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்களையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். சீமான், சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் போட்டியிடவுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் 117 பெண்கள், 117 ஆண்கள் என 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ என்ற கருப்பொருளில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு நேற்று ஆலம்பட்டி புதூரில் நடைபெற்றது.

சீமானின் தாய் அன்னம்மாள், மனைவி கயல்விழி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி நாதக மாநாட்டைத் தொடங்கி வைத்தனர்.

மாநாட்டில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உரையாற்றியபோது, “புதிய தேசம் செய்வோம் எனும் பெரும் கனவுடன் அரசியலுக்கு வந்தோம்.

“சமரசமின்றி ஐந்தாவது முறையாக தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வருகிறோம். இப்போது கூட்டணி என்பது சீட்டணியாகவும் நோட்டணியாகவும் உருவெடுத்துள்ளது. ஆனால், எங்களுடைய இலக்கு ஆள் மாற்றம், ஆட்சி மாற்றம் இல்லை. ஆட்சிமுறை மாற்றம். அரசியலில் நாம் தமிழர் கட்சி தனித்து நிற்கிறது. எங்கள் உடன் பிறந்தவர்கள் நாதகவை கைவிட மாட்டார்கள் என்பதை நம்பி தனித்து நிற்கிறோம்.

அறிவாயுதம் ஏந்தி அரசியல் களம் காண்கிறோம். இது ரசிகர் கூட்டம் அல்ல. லட்சியக் கூட்டம். தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழந்துவிடக் கூடாது என தனித்து நிற்கிறோம். சிதைந்து, அழிந்துகொண்டிருக்கும் தமிழ் மொழி காக்க நாங்கள் இயக்கத்தை கட்டி எழுப்பி வருகிறோம்.

நம் வரலாறு தெரியாதவர்கள் நம்மை ஆளத் தகுதியற்றவர்கள்

மக்களுக்காக உழைக்க வந்தவர்கள் நாம் தமிழர் கட்சியினர். நமது தலைவன் என்பவன் நமக்கு ரத்தமானவனாக இருக்க வேண்டும். அதுதான் நமது கோட்பாடு. நம் வரலாறு தெரியாதவர்கள் நம்மை ஆளத் தகுதியற்றவர்கள். நமக்கான வரலாற்றை நாமே எழுதுவதற்காகத்தான் இங்கு திரண்டிருக்கிறோம்.

நாதக இன உரிமை அரசியல் செய்கிறது. அது இனவெறி அரசியல் அல்ல. எனது தாய் நிலத்தை நான் ஆள வேண்டும் என கேட்பது எனது உரிமை. காலம் கட்டளையிட்டு எங்களை இந்தப் பணியைச் செய்யத் தூண்டியது. தமிழ் தேசிய அரசியல் காலத்தின் தேவை. இழந்த உரிமையை மீட்க வெறிகொண்டு எழுந்து வருகிறோம்.

பேயும் வேண்டாம் பிசாசும் வேண்டாம்

திமுகவை விரட்டிவிட்டு அதிமுகவை ஆட்சியில் அமரவைப்பது பேயை விரட்டிவிட்டு பிசாசை திருமணம் செய்வது போன்றது. ஒரே ஒரு முறை ஆட்சியை எங்களுக்கு கொடுத்துப் பாருங்கள். உலகின் தலைசிறந்த நாடாக மாற்றவில்லை எனில் அடுத்த தேர்தலில் எங்களைத் தோற்கடித்துவிடுங்கள் என்று சீமான் பேசியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்