தோற்று, தோற்று தொடர் வெற்றி

தோற்று, தோற்று தொடர் வெற்றி

3 mins read
48c8beaa-2e9a-4063-b651-56e1a3791069
ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி படிப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. - படம்: செயற்கை நுண்ணறிவு

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சி.பா. ஆதித்தனார் தலைமையில் உருவான ‘நாம் தமிழர்’ என்னும் கட்சியே செந்தமிழன் சீமான் வழிநடத்தும் நாம் தமிழர் கட்சியின் முன்னோடியாகக் கருதப்படுகிறது.

சீமானுக்கும் அவரது கட்சிக்கும் தமிழகத்தில் தனித்துவமான செல்வாக்கு இருப்பதை யாராலும் மறுக்க இயலாது. தமிழ் மக்களை முன்னிறுத்தும் அவரது கொள்கைகளும் தமிழர் உரிமையை உரக்க முழங்கும் அவரது தனிபாணியும் இன்றுவரை பலரையும் ஈர்த்து வருகின்றன. பெண்களுக்குச் சம உரிமை, படித்தோருக்கு அங்கீகாரம் போன்றவற்றை அவரது வேட்பாளர் பட்டியலில் காணலாம். இந்தத் தேர்தலிலும் 40 பொறியாளர்கள், 33 வழக்கறிஞர்கள், 15 மருத்துவர்கள் அந்தப் பட்டியலில் உள்ளனர். 59 வயது சீமானும் ஒரு பொருளியல் பட்டதாரியே.

சீமானின் இடிமுழக்கப் பேச்சு கிராம மக்களைக் கவர்ந்துள்ளதால், உள்ளாட்சி மன்றங்களில் அந்தக் கட்சிக்கு ஆங்காங்கே பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.

ஆயினும், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் நாதக குரல் ஒலிக்கவேண்டும் என்பதே சீமான் விரும்பிகளின் நீண்டநாள் விருப்பம்.

ஒரு விழுக்காட்டில் தொடங்கி ஒவ்வொரு தேர்தலிலும் நாதகவின் வாக்கு வங்கி வளர்ச்சி கண்டுவருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 30 லட்சம் வாக்குகளுடன் 6.6 விழுக்காட்டை எட்டிய நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் இன்னும் கொஞ்சம் வளர்ந்து 35 லட்சம் வாக்குகளுடன் 8.2 விழுக்காட்டை அக்கட்சி பெற்றது. அதனாலேயே மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத் தகுதியை நாதக பெற்றது. அந்த வெற்றியைப் பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து, “ஆலின் விதையொன்று தனித்து நின்று ஓசையின்றித் துளிர்விடுவதும் இலைவிடுவதும்போல சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது,” என்றுரைத்தார்.

‘இனி எல்லாம் வெற்றிதான்’ என நம்பிக்கையுடன் அக்கட்சி எழும்போதெல்லாம் அதன் எழுச்சியை இறக்கிவிட ஏதாவது ஒரு கட்சி குறுக்கே வந்துவிடுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் அறிமுகம் கண்ட மக்கள் நீதி மய்யம், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் நாதகவின் நகர்ப்புற வாக்குகளைப் பதம் பார்த்தது.

சரி, இந்தத் தேர்தலில் 8 விழுக்காட்டை 10 விழுக்காடாக உயர்த்த மக்களின் ஆதரவைப் பெற்று பெரிய கட்சிகளுக்குச் சவால் கொடுக்கலாம் என்று புறப்பட்ட வேளையில் சீமானின் குரலைச் சிதறடிக்கும் விதமாக ‘விசில்’ சத்தம் காதுகளில் கேட்கிறது.

அது அவரது பிரசாரத்தில் எதிரொலிக்கிறது. “15 ஆண்டுகளாகக் கத்தியும் பலனில்லை,” என்று விரக்தியை வெளிப்படுத்தும் அளவுக்குத் தோல்வி ஒட்டிக்கொண்டுள்ளது. அதனைத் துடைக்க உத்திகளில் மாற்றம் தேவை என உரைக்கின்றனர் மூத்த அரசியல் பார்வையாளர்கள்.

சீமான் மட்டுமே அந்தக் கட்சியில் வெளிச்சமாகத் தெரிகிறார். இரண்டாம் கட்டத் தலைவர்களைத் தேடவேண்டி உள்ளது. சின்னங்கள் மாறுவதும் ஒரு சிறிய சறுக்கலை ஏற்படுத்தும். மக்களவைத் தேர்தலில் 35 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை அள்ளித் தந்துப் பெருமைப்படுத்திய ஒலிவாங்கி (மைக்) இந்தத் தேர்தலில் இல்லை என்பது அவர்களின் விமர்சனம்.

லஞ்சம் கூடாது, இலவசம் கூடாது என விண்ணதிர முழங்குவது ஏற்கத்தக்கவையே. ஆனால், கூட்டணியும் கூடாது என்கிற நிலைப்பாடுதான் வெற்றியைத் தள்ளிப்போடுகிறது என்கின்றனர் விமர்சகர்கள்.

முன்னொரு காலத்தில் பெரும்பாலான தமிழக மக்களின் மனத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த மக்கள் திலகம் எம்ஜிஆரே, 25 ஆண்டுகால அரசியல் அனுபவம் இருந்தும் கம்யூனிஸ்டுகளுடன் கரம்கோத்துத்தான் களம் கண்டார்; முதல்வர் ஆனார்.

கேப்டன் விஜயகாந்த்கூட ஒருமுறை தனித்து நின்றுவிட்டு இரண்டாவது தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தார்; 29 எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். ஆனால், நாடாளுமன்ற, சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் நாதக ஐந்தாவது முறையும் தனித்தே நிற்கிறது. வேட்பாளர்கள் தோற்றாலும் கட்சியின் வாக்கு விகிதம் தொடர்ந்து வளர்வதும் ஒரு வகையில் வெற்றிதான். அந்த அதிசயம் நாதகவுக்கே சொந்தம். -திருநா

குறிப்புச் சொற்கள்