தமிழகத்தில் 2011ஆம் ஆண்டைவிட வீடுகளின் எண்ணிக்கை 15% அதிகரிப்பு

தமிழகத்தில் 2011ஆம் ஆண்டைவிட வீடுகளின் எண்ணிக்கை 15% அதிகரிப்பு

2 mins read
2a9c0a5a-7ce0-4f36-8eaa-dd787c8d7799
ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்​கிய வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் தற்போது மாநில அளவில் நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளன.  - சித்திரிப்புப் படம்:
multi-img1 of 2
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், தற்போது வீடுகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 10 முதல் 15 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநில மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநர் எம். சுந்தரேஷ்பாபு தலைமையில், தமிழகம், புதுவையில் கடந்த ஜூலை 17ஆம் தேதி முதல் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 1.50 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்​கிய வீடுகள் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது மாநில அளவில் நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளன. களப்பணியாளர்கள் சேகரித்த விவரங்களைச் சரிபார்த்து, கணினியில் பதிவேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 2011ல் தமிழகத்தில் 3 கோடியே 21 லட்சம் வீடுகள் இருந்தன. தற்போதைய கணக்கெடுப்பில் சமையலறை வசதியை அடிப்படையாகக் கொண்டு வீடுகள் கணக்கிடப்பட்டுள்ளன. உயர்கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கட்டட வளாக அடிப்படையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.

நகர்ப்புறங்களில் தொகுப்பு வீடுகள் உயர்வு

புதிய கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மாநிலம் முழுவதும் தொகுப்பு வீடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, வரும் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழு அளவிலான மக்கள்தொகை கணக்கெடுப்புத் தொடங்கும்போது, நகர்ப்புறங்களில் தொகுப்பு வீடுகளில் வசிப்போரின் எண்ணிக்கை 20 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் இப்பணிகளுக்காக 9,269 வட்டங்கள் பிரிக்கப்பட்டு, 8,260 பணியாளர்கள் நேரடிக் கள ஆய்வில் ஈடுபட்டனர். மாநகராட்சிப் பகுதிகளில் பணிகள் இன்னும் முழுமை பெறாததால், மண்டல வாரியாக சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கணக்கெடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
வீடுகள்கணக்கெடுப்புஅதிகரிப்புமக்கள்தொகைசென்னை மாநகராட்சி