சென்னை: கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
காவல்துறை மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகவே இது சாத்தியமானதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழகத்தில் நடந்த கொலை வழக்குகள் குறித்து பகுப்பாய்வு செய்ததில், 2017-2020ஆம் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான கொலைகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக, 2019ல் மாநிலம் முழுவதும், 1,745 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன.
“எனினும், 2021க்குப் பின்னர் ஆண்டுதோறும் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாகப் பதிவாகி வருகிறது.
“கடந்த 12 ஆண்டுகளில் எந்தவோர் ஆண்டையும்விட, 2024ல் குறைந்த அளவாக 1,563 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன,” என்று டிஜிபி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக, ஆறு ஆண்டுகளில் ரவுடித்தனம் தொடர்பான கொலைகளும் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கடந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 354 கொலைகள் நடந்துள்ளதாகவும் இந்த ஆண்டில் அதே மூன்று மாத காலத்தில், 340 கொலைகளாக அந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.
“கடந்த 2024ல் 3,645 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இது மற்ற ஆண்டுகளைவிட அதிகமாகும். நீதிமன்றங்கள் வாயிலாக, 242 ரவுடிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. 68 ரவுடிகளின் பிணை ரத்து செய்யப்பட்டு உள்ளது,” என்று சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.