தமிழகத்தில் ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரிப்பு

1 mins read
11c7c352-0305-45a5-9c44-88617559f1ae
‘ராம்சர்’ என்பது ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு என்பவை தொடர்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும். - படங்கள்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் ‘ராம்சர்’ பகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இப்பகுதிகள் மிக அதிகமாக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

‘ராம்சர்’ என்பது ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு என்பவை தொடர்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும். இதை ஈரநிலங்களுக்கான சாசனம் என்றும் அழைப்பர்.

“உலக ஈரநிலங்கள் தினமான பிப்ரவரி 2ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டமும் தேர்தங்கல் பறவைகள் காப்பகங்களும் புதிய ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இச்செய்தியைப் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்,” என உலக ஈரநிலங்கள் தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சமூக ஊடகப் பதிவின்மூலம் தெரிவித்துள்ளார்.

“இதன்மூலம், தமிழகத்தில் இருக்கும் ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே இது ஆக அதிகமாகும். ஈரநிலங்களைப் பாதுகாப்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. வளமான இயற்கை மரபைக் காக்க மேலும் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்,” என அவர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தைப் போன்று ஜார்க்கண்ட்டில் இருக்கும் உத்வா ஏரி, சிக்கிம் ஹேச்ரோ பள்ளி பகுதியும் ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், நாடு முழுவதும் ராம்சர் தளங்கள் எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்