கோவை: தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கோவையில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட பாஜக அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழகத்தில் ஆட்சியாளர்கள் பொய் சொல்வதாகச் சாடினார்.
“2026ஆம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியுடன்தான் துவங்கப் போகிறது. திமுகவின் தேச விரோத, மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது. தமிழகத்தில் நிலவும் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
“நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்குமே தவிர, குறையாது,” என்றார் அமித்ஷா.
“பிரதமர் மோடி தமிழகத்துக்கு உரிய நிதி வழங்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். இது பொய்யான தகவல்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வெறும் 1.52 லட்சம் கோடிதான் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி நிதி கொடுக்கப்பட்டு உள்ளது. நான் இங்கு உண்மையை கூறி உள்ளேன், நீங்கள் கட்டாயம் எனக்கு பதில் அளிக்க வேண்டும்,” என்றார் அமித்ஷா.

