காஞ்சிபுரம்: கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளைக் கொன்ற தாய்க்கும் கள்ளக்காதலனுக்கும் காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான விஜய் என்பவரின் மனைவி அபிராமி (25 வயது). இவர்களுக்கு 6 வயதில் அஜித் என்ற மகனும் 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியில் உள்ள பிரியாணிக் கடையில் வேலை பார்த்து வந்த 25 வயதான மீனாட்சி சுந்தரத்துக்கும் அபிராமிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில், அபிராமியின் இரு குழந்தைகளும் தொல்லையாக இருப்பதாக கள்ளக்காதலர்கள் கருதினர். இதனால் குழந்தைகளுக்கு தூக்க மாத்திரைகளைக் கொடுத்து கொலை செய்தார் அபிராமி. மேலும், தனது கணவரையும் இதேபோன்று கொலை செய்ய முயன்றார்.
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கணவர் விஜய், மறுநாள் குழந்தைகளை எழுப்ப முயன்றபோது, ‘குழந்தைகள் தூங்கட்டும்’ எனக் கூறி அவரைத் தடுத்துவிட்டார் அபிராமி.
பிறகு அலுவலகம் சென்ற விஜய், மாலை வீடு திரும்பிய போதுதான் குழந்தைகள் கொல்லப்பட்டது தெரியவந்தது.
குழந்தைகளைப் பார்த்து கதறியழுதார் விஜய்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, அபிராமியின் கள்ளக்காதல் விவகாரம் அம்பலமானது. அவரும் மீனாட்சி சுந்தரமும் கைதாகினர்.
இந்த வழக்கில் வியாழக்கிழமை (ஜூலை 24) தீர்ப்பு வழங்கப்பட்டது. குழந்தைகளைக் கொன்ற இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.