சென்னை: தமிழ்நாட்டில் கோயில் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ள அதிகாரிகள் தவறுசெய்யக் கூடாது என அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
திருத்தொண்டர் அறக்கட்டளை தலைவரான சேலம் ஏ.ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோயில் திருவிழாக்களின் வரவு - செலவுக் கணக்கு விவரங்களை இந்து சமய அறநிலையத்துறையின் தணிக்கைப் பிரிவு அதிகாரிகள் தணிக்கை செய்து அறிக்கை அளித்துள்ளனர்.
அதில் கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பலமுறை புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் புகார் பரிசீலிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, ‘‘கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன என அறநிலையத்துறையின் தணிக்கைக் குழு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
“கோயில் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ள அதிகாரிகள் அதில் தவறு இழைக்கக்கூடாது. எனவே, மனுதாரரின் புகாரை 12 வார காலத்துக்குள் பரிசீலித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

