விமானங்கள் தாமதம், ரத்தால் இழப்பீடு தருவதாக பயணிகளிடம் நூதன மோசடி: அதிகாரிகள் எச்சரிக்கை

விமானங்கள் தாமதம், ரத்தால் இழப்பீடு தருவதாக பயணிகளிடம் நூதன மோசடி: அதிகாரிகள் எச்சரிக்கை

படம்: இந்திய ஊடகம்

23 Dec 2024 - 6:06 pm

2 mins read

ஆலந்தூர்: சென்னை விமான நிலையத்தில் அண்மைக்காலமாக மோசமான வானிலை, புயல், கனமழை காரணமாக பல விமானங்கள் தாமதமாகின, சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு மோசடிக் கும்பல் தற்போது புதுவிதமாகப் பாதிக்கப்பட்ட விமானப் பயணிகளைக் கைப்பேசி மூலம் தொடர்புகொண்டு விமானப் பயணம் தாமதம் அல்லது ரத்து போன்றவற்றிற்கு இழப்பீடுகள் தருவதாகக் கூறி வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு சுருட்டி வருகின்றனர்.

இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயரைப் பயன்படுத்தி, விமானப் பயணிகளிடம் நூதன முறையில் மோசடி செய்யும் கும்பல் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதில், “இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயரைப் பயன்படுத்தி, விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து ஆனதற்கு தகுந்த இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்கப் போவதாக, போலியான கைப்பேசி அழைப்புகள் மூலம் பயணிகளை ஏமாற்றி வருகின்றனர். அதற்கும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

“அதைப் போன்று இழப்பீடுகள் கொடுக்கும் திட்டமும் இல்லை. எனவே இதுபோன்ற போலியான கைப்பேசி அழைப்புகள் வந்தால், பயணிகள் யாரும் அதை நம்ப வேண்டாம். பயணிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக அவர்கள் பயணம் செய்ய இருந்த விமான நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, விவரங்கள் கேட்டு அறிந்து, தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

“மோசடிக் கும்பலிடம் வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் பயணிகளுக்குப் பெரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. போலியான அழைப்புகள் வந்தால் அந்த தொலைபேசி எண்கள் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் பயணிகள் புகார் செய்யுங்கள்,” என்று அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “இந்தப் போலி மோசடிக் கும்பல் குறித்து காவல்துறையிலும் புகார் தெரிவித்து உள்ளோம்,” என்றனர்.

குறிப்புச் சொற்கள்