சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ளம் ஏற்பட்டபோது மணலி பகுதியில் உள்ள சிபிசிஎல் நிறுவனம் அருகில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக திடீரென எண்ணெய்ப் படலம் பரவியது. இது கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம் வழியாக கடலில் கலந்தது.
இதன் காரணமாக அப்பகுதிகளில் மீன்கள் செத்து மிதந்தன. எண்ணெய் படலம் படிந்ததால் பறவைகளும் பாதிக்கப்பட்டன. மேலும், குடியிருப்புச் சுவர்கள், தெருக்கள், நிலப்பரப்பில் உள்ள தாவரங்கள் மீதும் எண்ணெய்ப் படலம் படிந்தது.
இச்சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை பசுமை தீர்ப்பாயம் அமைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 24) விசாரணைக்கு வந்தது.
அப்போது, “சேகரிக்கப்பட்ட எண்ணெய்க் கழிவுகள் அடிப்படையில், எண்ணெய்க் கழிவை வெளியேற்றிய சிபிசிஎல் நிறுவனம் ரூ.73 கோடியை இழப்பீடாகச் செலுத்தவேண்டும்,” என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், ‘‘மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த இழப்பீட்டு தொகை போதாது. அதை அதிகரிக்கவேண்டும்,’’ என வாதிட்டார். அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை, அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

