கடலூர் பறவைக் காய்ச்சல் எதிரொலி: இந்திய முட்டை இறக்குமதிக்கு ஓமான் தடை

கடலூர் பறவைக் காய்ச்சல் எதிரொலி: இந்திய முட்டை இறக்குமதிக்கு ஓமான் தடை

கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

22 Nov 2026 - 5:33 pm

2 mins read

நாமக்கல்: கடலூர் மாவட்டத்தில் உள்ள சில கறிக்கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வதற்கு ஓமான் நாடு முழுமையாகத் தடை விதித்துள்ளது.

இந்தத் திடீர் நடவடிக்கையால், நாமக்கல் மண்டலத்திலிருந்து மாதந்தோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த ஏறக்குறைய மூன்று கோடி முதல் ஆறு கோடி முட்டைகளின் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு வளர்க்கப்படும் எட்டுக் கோடி கோழிகள் மூலம் நாள்தோறும் ஆறு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அவை உள்நாட்டுத் தேவைகளுக்குப் போக, ஓமான் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையால் பண்ணையாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

கடலூரில் நோய்ப் பரவலைத் தடுக்க பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்த கோழிகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன என்றும் நாமக்கல் மண்டலத்தில் நவீன கூண்டு முறையிலும், கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட முழுமையான உயிரிப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் கோழிகள் வளர்க்கப்படுவதால் இங்கு நோய் பரவ வாய்ப்பில்லை என்றும் கால்நடை, விவசாயப் பண்ணையாளர்கள், வர்த்தகர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் செந்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் நாமக்கல் மண்டலத்தைத் ‘தனி முட்டை ஏற்றுமதி மண்டலமாக’ அறிவிக்க வேண்டும் என்றும் ஓமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரு செந்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆலப்புழா நிலவரம்

இதற்கிடையே, கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திலும் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப் பகுதிகளான தென்காசி மாவட்டம் புளியரை, கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு ஆகிய இடங்களில் சிறப்புச் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கேரளத்திலிருந்து கோழி, முட்டை, இறைச்சி, தீவனங்கள் தமிழகத்திற்குள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்