சென்னை: இந்திய அரசியலை என்றென்றைக்குமாக மாற்றியமைத்துவிடக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை. ஆனாலும், பழிவாங்கும் எண்ணத்துடனும், நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் மையமான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் பாஜக அடைந்துள்ள தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பவும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முயற்சியை மேற்கொள்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திரு ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றொழித்து ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதால், கூட்டாட்சியியலுக்கு எதிரானதும், நடைமுறைச் சாத்தியமற்றதுமான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை இண்டியா கூட்டணி உறுதியாக எதிர்க்கும். அதிபர் தேர்தலை நடத்துவது போல் பொதுத் தேர்தல்களை நடத்தும் உள்நோக்கத்துடன் இத்திட்டத்தை மத்திய பாஜக அரசு திணிக்கிறது. இது நமது அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானதாகும்.
“நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தால், நமது அரசியலமைப்பை வடித்துத் தந்தோர் நம் நாடு அராஜகத்துக்குள்ளும் சர்வாதிகாரத்துக்குள்ளும் நழுவி வீழ்ந்துவிடாமல் தடுப்பதற்காக, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல்கள் நடத்தப்படுவதன் மூலமாக சட்டரீதியாக அமைத்த அரண்கள் நீக்கப்படும். மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிடும். மாநில உணர்வுகளும் பன்முகத்தன்மையும் அழிக்கப்படும்,” என்றார்.
“தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில் திணிக்கப்படும் இந்த அருவருப்பான நடவடிக்கையைத் தீவிரமாக எதிர்ப்பதில் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்தியாவை, அதன் பன்முகத்தன்மையை, அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.