37,000 பிள்ளையார் சிலைகளுக்கு ஒரு லட்சம் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு

37,000 பிள்ளையார் சிலைகளுக்கு ஒரு லட்சம் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு

2 mins read
0d282dd6-8226-4c74-8eca-20fdd32ef88b
சென்னை பெருநகரில் மட்டும் 1,562 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.  - படம்: தினமணி

சென்னை: தமிழகம் முழுவதும் பிள்ளையார் சதுர்த்தி விழா திங்கட்கிழமை (செப்டம்பர் 14) மிகுந்த பக்தியுடனும் கோலாகலத்துடனும் தொடங்கியது.

பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் வீடுகளிலும் பொது இடங்களிலும் பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர்செய்யும் பொருட்டு, மாநிலம் முழுவதும் காவல்துறை தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 37,000 பிள்ளையார் சிலைகளைப் பந்தல்களில் நிறுவி வழிபாடு செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

சென்னை பெருநகரில் மட்டும் 1,562 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் சிறு, பெரிய அளவிலான சுமார் 1.39 லட்சம் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது அமைதியை உறுதி செய்யும் வகையில் சிலைகளின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அறிவுறுத்தியுள்ளன.

மேலும், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகள் வைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேதிப் பொருள்கள் கலக்காத, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களின்படி தயாரிக்கப்பட்ட சூழல் நட்புச் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விழா அமைதியாக நடைபெறுவதை உறுதிசெய்ய தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னையில் மட்டும் 16,000 காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அனைத்து வழிபாட்டுப் பந்தல்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, தலா ஒரு காவலர், தன்னார்வலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை (செப்டம்பர் 14) தொடங்கிய சிறப்பு பூசைகளைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட நீர்நிலைகளில் பாதுகாப்புடன் கரைக்கப்பட உள்ளன.

குறிப்புச் சொற்கள்