சென்னை: தமிழகத்தில் மே 4ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
அதையடுத்து, தமிழகத்தில் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
மாநிலம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளன. அம்மையங்களில் உள்ள ‘ஸ்ட்ராங் ரூமில்’ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மூன்று முதல் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்குகள் முதலில் எண்ணப்படும்.
முதல் சுற்றின் முடிவுகள் காலை 9 மணிக்குள் வெளியாகும் என்றும் நள்ளிரவுக்குள் அனைத்துத் தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ணும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை இணையத்தளத்தில் உடனுக்குடன் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளைத் தனித்தனியாக, உடனடியாகத் தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், கைப்பேசிச் செயலிகள் மூலமும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான மேசைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்புக் கேமராக்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார்நிலையில் இருப்பதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கியமான நகரங்களில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள், முக்கியச் சாலைகள், ரயில், பேருந்து, விமான நிலையங்கள் ஆகியவை காவல்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
வாக்குகள் எண்ணப்படும் நாளில் எந்தவிதச் சட்ட, ஒழுங்குப் பிரச்சினையும் தலைதூக்கக் கூடாது என்பதில் காவல்துறை கவனமாக உள்ளதாகத் தெரிகிறது.
காவல்துறையினருடன் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல் ஆணையமும் காவல்துறையும் அறிவித்துள்ளன.

