மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்க்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு

மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்க்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு

2 mins read
f39aa92b-88d4-4ece-9089-94b1bc5da0cf
மூன்றாவது குழந்தை பெறும் தமிழக அரசுப் பெண் ஊழியர்களுக்கு ஓராண்டு முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆகஸ்ட் மாதம் சட்டமன்றத்தில் அறிவித்தார். - கோப்புப் படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்
Google News Preferred Icon

சென்னை: தமிழ்நாட்டில் மூன்றாவது குழந்தையைப் பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பை 365 நாட்களாக உயர்த்தி தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் இரு குழந்தைகளுக்கு மேல் உள்ள பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்கள் மட்டுமே முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2026-27ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது சட்டமன்றத்தில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதனைச் செயல்படுத்தும் வகையில் மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தி தற்போது இதற்கான அரசாணையைப் பிறப்பித்துள்ளார்.

இந்தச் சலுகை நிரந்தர மற்றும் தற்காலிகப் பணிகளில் உள்ள அனைத்துத் திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு முன்னர் மூன்றாவது குழந்தைக்காக விடுப்பில் சென்று, அன்றைய தேதியிலும் தொடர்ந்து விடுப்பில் இருக்கும் பெண் ஊழியர்களும் இந்தச் சலுகையைப் பெறத் தகுதி பெறுவர்.

பெண் ஊழியர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப, குழந்தை பிறப்பதற்கு முந்தைய ஓய்வு காலம் முதல் குழந்தை பிறந்த பிறகு உடல்நலம் தேறும் காலம் வரை, முழு ஊதியத்துடன் கூடிய இந்த 365 நாட்கள் விடுப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கட்டுமானம், அமைப்புசாரா ஊழியர் உதவித் திட்டங்கள்

மேலும், கட்டுமானம், அமைப்புசாரா ஊழியர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டன.

கட்டுமான ஊழியர்களுக்கு நவீன தொழில்நுட்பப் பயிற்சி அளிக்க ரூ.76.46 கோடியில் 5 தொழில் திறன்மிகு மையங்களும் ரூ.15.06 கோடியில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பயிற்சியும் வழங்கப்படும்.

சென்னை, கோவையில் ரூ.14 கோடியில் தங்குமிடங்கள், 50 வசதி மையங்கள், நடமாடும் பாதுகாப்புப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

இணையவழி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் விபத்துக் காப்பீடு, மின்-மோட்டார்சைக்கிள் வாங்குவதற்கான வட்டித் தள்ளுபடி வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மின் ஆட்டோ வாங்க ரூ.75,000 வரை மானியமும், ஆட்டோக்களை சிஎன்ஜி முறைக்கு மாற்ற ரூ.30,000 மானியமும் அளிக்கப்படும்.

மேலும், ‘ஐடிஐ’ மாணவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் பயிற்சி உள்ளிட்ட பல சலுகைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

குறிப்புச் சொற்கள்