சென்னை: இணைவழிக் குற்றங்களால் பணத்தை இழக்கும் பொதுமக்கள், 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், இழந்த தொகையை விரைவாக மீட்க முடியும் என்று சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கவும் காவல்துறை சார்பில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இணையவழி மோசடிகள் மூலம் ஒரே நிமிடத்தில் இழந்து விடுகின்றனர்.
இதுவரை சென்னையில் மட்டும் பொதுமக்கள் இத்தகைய மோசடிகள் மூலம் ஏறக்குறைய 370 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளனர். இதில் காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையால் ரூ.100 கோடி முடக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.20 கோடி வெற்றிகரமாக மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், காவல்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளின் பகுதியாகவும் தவறு இழைக்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் லஞ்சம், இதர முறைகேடுகளில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
60 காவலர்கள் பிற மாவட்டங்களுக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 40 பேர் மீதான புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

