சென்னை: தமிழ்நாட்டில் இணைய விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பைக் கட்டாயமாக்கியும், நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையும் எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மார்ச் 21ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இணைய விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு இணையச் சூதாட்டத் தடை மற்றும் இணைய விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘அதிர்ஷ்டத்திற்கான’ இணைய விளையாட்டுகளைத் தமிழ்நாடு அரசு தடை செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்தது.
ஆனால், திறமைக்கான இணைய விளையாட்டுகளான ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளைத் தடை செய்தது செல்லாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மேலும், இணைய ரம்மி போன்றவற்றை விளையாடுவதற்கு வயது, நேரம் ஆகியவற்றில் கட்டுப்பாடு விதிக்கலாம் என்றும் அது உத்தரவிட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் இணைய விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிதாக விதிமுறைகளை வகுத்து தமிழக அரசு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
அதில், இணைய விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பைக் கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைனில் விளையாட முடியாதபடி நேரக் கட்டுப்பாடு விதித்தும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பல்வேறு தனியார் இணைய விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
தொடர்புடைய செய்திகள்
அப்போது, இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மார்ச் 21ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

