இணையம்வழி மது விற்பனை: தமிழக அரசை எதிர்த்து வழக்கு

இணையம்வழி மது விற்பனை: தமிழக அரசை எதிர்த்து வழக்கு

கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

13 Aug 2026 - 5:39 pm

2 mins read

சென்னை: தமிழக அரசு இணையம் வழி மதுபானங்களை விற்க முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அரசின் முடிவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

சமூகநீதிப் பேரவையின் தலைவரும் வழக்கறிஞருமான கே பாலு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழகத்தில் கடந்த 1971ஆம் ஆண்டு வரை முழு மதுவிலக்கு நீக்கப்பட்டு, தற்போது டாஸ்மாக் அரசு நிறுவனம் மது விற்பனை செய்யப்பட்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொது சுகாதாரம், ஊட்டச்சத்துக்களை மக்களிடையே ஊக்குவித்தல், உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள், மதுபானங்களைத் தடை செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுக்கு முரணாகத் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக வழக்கறிஞர் பாலு சுட்டிக்காட்டியுள்ளார்.

பள்ளிக்கூடம், கோவில் உள்ளிட்டவைகளுக்கு அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட கடந்த மே 12ஆம் தேதி முதல்வர் உத்தரவிட்ட நிலையிலும், அவற்றில் பல கடைகள் செயல்படுவதாக அவர் சாடியுள்ளார்.

இந்நிலையில், இணையம் மூலம் பதிவு செய்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளதாக திரு பாலு தெரிவித்துள்ளார். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது என்பது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சட்டம்.

ஆனால், பெரியவர்கள் இணையம் மூலம் மதுபானம் வாங்கும்போது அதே வசதியைப் பயன்படுத்தி சிறார்களும் மதுபானம் வாங்க வாய்ப்பு உள்ளதாக திரு கே பாலு கவலை தெரிவித்துள்ளார்.

நியாய விலைக் கடைகள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் முதியவர்கள், பெண்கள் என்று கால் வலிக்க வரிசையில் நிற்பவர்களுக்கு இதுபோல் இணையம் மூலம் பதிவு செய்ய எந்த வசதியும் இல்லை.

ஆனால், மது அருந்துபவர்களுக்குத் தமிழக அரசு இந்த வசதியைச் செய்து கொடுத்துள்ளதால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய தீங்கு ஏற்படும் என்று திரு பாலு எச்சரித்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

குறிப்புச் சொற்கள்