மதுரை: தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றிய இணைய மோசடிக் கும்பலுக்கு மதுரை காவல்துறை வலைவீசியுள்ளது.
மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இந்த மோசடிக் கும்பல் செய்த விளம்பரத்தைக் கண்டு ஏமாந்து, பணத்தை இழந்து தவிக்கின்றனர்.
அந்த இணைய மோசடித் தொடர்பாக, தென்மாவட்ட காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்துவருகின்றன. அந்த மோசடிக் கும்பல் முகவர்களை நியமித்து, அப்பாவி மக்களைக் கைப்பேசியில் இரண்டு செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர்.
பிறகு ஒரு செயலிமூலம் ரூ.50,000 பணமும் மற்றொரு செயலிமூலம் ஒரு லட்சம் ரூபாயும் முதலீடாகச் செலுத்தினால் 45 நாள்களில் பணம் இரட்டிப்பாகும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ளனர்.
மேலும், பதிவு செய்யப்பட்ட கைப்பேசிக்கு வரும் குறுந்தகவலை தேர்வு செய்தால் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்ய முடியும் என்றும் அதன்மூலம் டாலர் மதிப்பு உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்த சிலருக்கு, தொடக்கத்தில் கவர்ச்சிகரமான தொகையைத் திரும்பக் கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். பின்னர், லட்சம், கோடி என்று முதலீடு செய்ய வைத்தபிறகு இரு செயலிகளையும் முடக்கிவிட்டதாகத் தெரிகிறது.
அந்த மோசடிக் கும்பலிடம் நூற்றுக்கணக்கானோர் தாங்கள் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த பணத்தை இழந்துள்ளனர்.
திருச்சுழி அருகே உள்ள திருவளர்நல்லூரைச் சேர்ந்த அய்யம்பாண்டி என்ற தொழிலாளி அளித்த புகாரின்பேரில், விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய உள்ளூர் முகவர்களான முத்துராஜ், முத்துப்பாண்டி, திராவிடமணி ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அறியாத நபர்கள், உரிமம் பெறாத செயலிகளில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்றும் சந்தேகத்திற்குரிய முதலீட்டுச் செயலிகள் குறித்து உடனடியாகக் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மதுரையில் இருந்து இயங்கியதாகவும் மதுரை காவல்துறை தனிப்படை அமைத்து அவர்களைத் தேடி வருவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


