சென்னை: உலகில் தந்தையை வேவு பார்த்த மகன் இருப்பதாகப் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
தாம் அவ்வாறு வேவு பார்க்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். செய்தியாளர்களிடம் அந்தத் தகவலைத் திரு ராமதாஸ் பகிர்ந்துகொண்டார்.
திரு ராமதாஸ் மகன் திரு அன்புமணியைக் கருத்தில்கொண்டு அவ்வாறு சொல்லியிருக்கிறார்.
அதன் தொடர்பில் விழுப்புரம் காவல்துறையிடம் புகார் கொடுத்திருப்பதாகத் திரு ராமதாஸ் கூறினார். இணையக் குற்றக் கண்காணிப்பு அமைப்பிடமும் அதுபற்றித் தெரிவித்திருப்பதாக அவர் சொன்னார். ஒட்டுக் கேட்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவியையும் காவல்துறையிடம் கொடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கருவி எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதைக் கண்டறியத் தாமும் தனிப்பட்ட முறையில் ஓர் அமைப்பை அணுகியிருப்பதாகத் திரு ராமதாஸ் சொன்னார். அந்த அமைப்பின் அறிக்கை காவல்துறைக்கும் இணையக் குற்றக் கண்காணிப்பு அமைப்புக்கும் உதவியாக இருக்கும் என்றார் அவர்.
இம்மாதம் 17ஆம் தேதி பொதுக்குழுவைக் கூட்டவிருப்பதாகவும் பாமக நிறுவனர் தெரிவித்தார். வேறு யாரும் கட்சியின் பெயரில் பொதுக்குழுவைக் கூட்டினால் அது கட்சி விதிமுறைகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் புறம்பானது என்று அவர் எச்சரித்தார்.
தாமே கட்சியின் நிறுவனர், தலைவர் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் மருத்துவருமான திரு ராமதாஸ். கட்சியினர் தம்மைச் சந்தித்துப் பேசக்கூடாது என்று சொல்ல எவருக்கும் அதிகாரம் இல்லை என்பதையும் அவர் வலியுறுத்திக் கூறினார்.
கடந்த சில காலமாகவே அவருக்கும் அவருடைய மகன் திரு அன்புமணிக்கும் இடையில் மோதல் வலுத்து வருகிறது.