சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தும் திட்டங்களில் ஒன்றாக அப்பகுதியில் ஒரு திறந்தவெளித் திரையரங்கத்தை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் கடற்கரைக்கு வருவோர், நெகிழிப் புட்டிகள் உள்ளிட்ட கழிவுகளை கடற்கரை மணலில் விட்டுச் செல்கின்றனர். கடற்கரையில் நாள்தோறும் ஏராளமான குப்பைகள் குவிகின்றன. அவற்றை சுத்தம் செய்ய இப்போதுள்ள வாகனங்கள் போதுமானதாக இல்லை. எனவே, தூய்மைப்படுத்தும் வாகனங்கள் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றைக் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல், கருணை அடிப்படையில் 411 பேருக்குப் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார்.
இந்நிலையில், மெரினா கடற்கரையில் பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்துவது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கடற்கரையை தூய்மையாகப் பராமரிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், அங்குள்ள சிறு சிறு கடைகளை முறைப்படுத்துதல், மெரினா தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள், மெரினாவை அழகுபடுத்த மாநகராட்சியிடம் உள்ள திட்டங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனிடம் கேட்டறிந்தார்.
கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் கூறியதாவது:
உலகில் நீளமான கடற்கரைகளில் மெரினாவும் ஒன்று. மெரினாவை சர்வதேச தரத்தில் அழகுபடுத்த வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். மெரினா தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் தீர்ப்புகளுக்காகக் காத்திருக்கிறோம்.
அதன் பிறகு, அனைத்துலக அளவிலான ஆலோசகரை நியமித்து, சுற்றுச்சூழல் விதிகளைக் கருத்தில் கொண்டு, தற்காலிக கட்டமைப்புகள் மூலம் திறந்தவெளி திரையரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள், மாற்றுத் திறனாளிகள் சென்று கடல் அலையை ரசிப்பது போன்று, முதியோர் ரசிக்கவும் பிரத்யேக வசதி, இசை நீருற்று உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழக்குகள் முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

