சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் தொடர்பான மறுவாழ்வுச் சேவைகளை வழங்கும் ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ், சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ள அந்த மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (நவம்பர் 25) திறந்து வைத்தார்.
உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம், ஒருங்கிணைந்த சேவைகளை அவர்களின் தேவைக்கேற்ப இல்லங்களிலும், மறுவாழ்வு சேவை ஊர்திகளிலும், ஒருங்கிணைந்த சேவை மையங்களிலும் வழங்குகிறது.
இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் அமையப் பெறவுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் முதலாவது மையம் இது.
இந்தச் சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக்கல்வி, கண்பார்வை அளவியல், கேட்டல் மற்றும் பேச்சுப்பயிற்சி, இயன்முறை, செயல்முறை, உளவியல் ஆகிய ஆறு மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படுகின்றன. இச்சேவைகளை வழங்க வல்லுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இம்மையம் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இம்மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனத்தில் முழுமையாக தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்ட ஐஓடி தொழில் நுட்பம் முதல் முறையாக இந்தியாவிலேயே இம்மையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அவசர சூழ்நிலைகளை, தொலைவில் இருந்தாலும் உடனே கண்டறிந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட முடியும்.
இம்மையம் 3.08 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு முன்னெடுப்பாக இம்மைய வளாகத்தில் மாற்றுத்திறனாளியால் நடத்தப்படும் ஆவின் பாலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்த முதல்வர், அங்கு மறுவாழ்வு சேவை பெற வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுவதுடன், மாற்றுத்திறனாளிகள், மன வளர்ச்சி குன்றியோர், தசைச்சிதைவு நோய், தொழுநோய், முதுகு தண்டுவடம் பாதிப்பு, நரம்பியல் நோய், பார்வை குறைபாடு, கருச்சிதைவு உள்ளிட்டவற்றிற்கு பராமரிப்பு உதவித்தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் அவர்கள் தங்களது சுய முயற்சியால் பல்வேறு துறைகளிலும் சாதனை படைக்கும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நிதி உதவி, தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இட ஒதுக்கீடு போன்றவற்றை அரசு வழங்கி வருகிறது.