தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வஉசி துறைமுகத்தில் ரூ.434 கோடி மதிப்பில் புதிய அனைத்துலக சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை மத்திய துறைமுகங்கள், கப்பல்– நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சர்பானந்தா சோனோவால் நாட்டுக்கு அர்ப்பணித்தார். திங்கட்கிழமை வஉசி துறைமுகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சர்பானந்தா, கடல்சார் துறையில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதற்கான ஓர் எடுத்துக்காட்டுதான் புதிய சரக்குப் பெட்டக முனையம் என்றார் அவர்.
“இந்த சரக்குப் பெட்டக முனையத்தின் மூலம் ஆறு லட்சம் சரக்கு பெட்டகங்களையும் 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட கப்பல்களையும் கையாள முடியும்.
“இந்த முனையம் அடுத்த அண்டு பிப்ரவரி மாதம்தான் பயன்பாட்டுக்கு வர வேண்டும். ஆனால் முன்கூட்டியே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன,” என்றார் அமைச்சர் சர்பானந்தா.
இந்தியாவின் பொருளியல் வளர்ச்சிக்கும் புதிய வேலை வாய்ப்புகளுக்கும் இத்தகைய நடவடிக்கைகள் உதவியாக இருக்கும் என்றும் தூத்துக்குடி வஉசி துறைமுகம் விரைவில் அனைத்துலக சரக்குப் பெட்டகப் பரிமாற்ற மையமாக மாறும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடியும் காணொளி வசதி மூலம் உரையாற்றினார்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது, தாம் ரூ.7,000 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்காக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்த பணிகள் நிறைவடையும்போது அத்துறைமுகம் பெரும் வளர்ச்சி காணும் என்றார்.