‘ஆபரேஷன் அகழி’: தமிழக மாவட்டங்களில் அதிரடி சோதனை

‘ஆபரேஷன் அகழி’: தமிழக மாவட்டங்களில் அதிரடி சோதனை

திருச்சியில் 825 இடங்களில் வாகனச் சோதனை நடத்திய காவல்துறை
படம்: ஊடகம்

22 Sep 2024 - 5:45 pm

2 mins read

திருச்சி: ‘ஆபரேஷன் அகழி’ என்ற பெயரில் பல்வேறு மாற்றங்களைக் காவல்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நில அபகரிப்பு கும்பல்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, புதுகோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஓராண்டாக நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் அதிகரித்து வந்தன.

இதையடுத்து, இரு மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உத்தரவின் பேரில் 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், ‘ஆபரேஷன் அகழி’ என்ற பெயரில் அதிரடிச் சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

நில அபகரிப்பு தொடர்பில் பப்லு, டேவிட் சகாயராஜ், ஜெய், பட்டறை சுரேஷ் உள்ளிட்ட 14 பேர் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும் கடந்த 19ஆம் தேதி முதல் இவர்களுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பலர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் என்று காவல்துறை கூறியுள்ளது.

முதற்கட்டமாக நடைபெற்ற சோதனையின்போது நில அபகரிப்பில் ஈடுபட்டோரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 258 நிலங்கள், சொத்து ஆவணங்கள், 68 வங்கிக்கணக்கு புத்தகங்கள், நிரப்பப்படாத காசோலைகள், கைப்பேசிகள், சிம் அட்டைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

மைக்கேல் சுரேஷ் என்பவரது வீட்டில் மட்டும் 66 அசல் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இவை அனைத்தும் கட்டப் பஞ்சாயத்து, கந்து வட்டித் தொழில் மூலம் பெறப்பட்டவை எனவும் தெரிய வந்துள்ளது.

‘அகழி’ சோதனை நடவடிக்கையை அடுத்து, திருச்சி மாவட்டத்தில் மட்டும் 825 இடங்களில் காவல்துறை வாகனச் சோதனையை மேற்கொண்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், ‘அகழி’ சோதனையின்போது மூன்று பட்டியல் தயார் செய்யப்பட்டதாகவும் அவற்றுள் முதல் பட்டியலில் உள்ளவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக காவல்துறை நடவடிக்கைகள் நீடிக்கும் என்றும் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்