சென்னை: தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென்தமிழகப் பகுதிகளின் மேல் வெளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் எதிர்வரும் 12ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் என்று அம்மையம் முன்னறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவானது.
திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்தது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழையுடன் வீசிய சூறாவளிக்காற்று காரணமாக ஏராளமான மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
மதுரை மாநகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. அப்போது தீக்கதிர் பகுதியில் ஜெயக்குமார் (65) என்ற முதியவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்தார்.
அவர் மதுப்போதையில் இருந்ததாக காவல்துறை பின்னர் தெரிவித்தது.