நைக்கி வடிவமைப்பு மையம் தமிழகத்தில் அமைய வாய்ப்பு

1 mins read
ca7549dd-aaf1-4761-b288-6b718e658c21
டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது தமிழக அரசு. - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டுக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நைக்கி, டிரில்லியன்ட் உள்ளிட்ட மேலும் பல முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் மூலம் மேலும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் திரண்டதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலக அளவில் விளையாட்டு வீரர்களுக்கான காலணிகளைத் தயாரிக்கும் நைக் நிறுவனம், தமிழகத்தில் ஏற்கெனவே காலூன்றி உள்ளது.

தமிழகத்திலும் தனது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அந்நிறுவனம், வருங்காலத்தில் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் மாநிலத்தின் காலணி ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் என்றும் தமிழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதற்காகத்தான் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

“சீனாவைப் போன்று வெறும் உற்பத்தித்தளமாக மட்டுமே தமிழகம் இருந்துவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

“முதல்வருடனான சந்திப்பின்போது சென்னையில் தனது வடிவமைப்பு மையத்தை அமைப்பது குறித்து நைக் அதிகாரிகள் விவாதித்தனர்.

“பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் வருங்காலத்தில் பல்வேறு நாடுகளுக்கான ஏற்றுமதியில் தமிழகம் முன்னிலை வகிக்கும்,” என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, அமெரிக்காவின் டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்றும் அந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலை, உலகளாவிய ஆதரவு மையத்தை தமிழகத்தில் அமைக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்