திருநெல்வேலி: தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) பரவலாக மழை கொட்டித் தீர்த்தது.
முன்னதாக, தென், டெல்டா மாவட்டங்களுக்கு, சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை விடுத்திருந்தது.
இந்நிலையில், இந்த எச்சரிக்கைக்கு ஏற்ப, அம்மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
நெல்லை டவுன், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை சந்தை, சமாதானபுரம், மகாராஜா நகர் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், புறநகர்ப் பகுதிகளான கங்கைகொண்டான், சேரன்மகாதேவி, மூன்றடைப்பு ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது.
அதேபோல், தூத்துக்குடி மாநகரப் பகுதிகள், விளாத்திகுளம், முத்தையாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் மார்ச் 11ஆம் தேதி காலை முதல் நல்ல மழை பெய்தது.
பலத்த காற்று வீசியதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 500 விசைப்படகுகளும் ஏறக்குறைய 1,000 நாட்டுப் படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.
மிக கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையால் நீர் நிலைகள், தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது.
இதேபோல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மேலும் சில மாவட்டங்களில் மழை பெய்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.